1917 திரைப்பட விமர்சனம்

1917 movie review 1
முதல் உலகப்போரின் ரத்தமும், சதையுமான கதைக்களம்தான் 1917 திரைச்சித்திரம். இதுவரை எவரும் கண்டிடாத ஒளிப்பதிவும், வரைகலை நுட்பமும் (vfx) முதல் உலகப்போரில் நம்மையும் ஒன்றிணைத்து, போர்களத்தில் நம்மையும் வீரர்களாய் கூட்டிச்செல்கிறது. சிறந்த ஒளிப்பதிவு (ரோஜர் டீகின்ஸ், சிறந்த ஒலிக்கலவை, சிறந்த வரைகலை என மூன்று ஆஸ்கார் விருதுகளையும்,மேலும் பல உலகசினிமா விழாக்களின் நாயகனாகவும் இன்றும் வலம் வந்துகொண்டிருக்கும் திரைப்படமே 1917.
கதைக்கரு :
பிரிட்டானியர்களுக்கும், ஜெர்மானியர்களுக்கும் முதல் உலகப் போரில், ஏப்ரல் 6ஆம் தேதி 1917 அன்று நடந்த உண்மை, வரலாற்று நிகழ்வை தழுவியே கதை தொடங்கி முடிகிறது.
பிரிட்டானிய படைகளும், ஜெர்மானிய படைகளும் மோதிக்கொண்டிருக்கு களத்தில், பிரிட்டனை சார்ந்த இரு வீரர்கள், தலைமையிடம் இருந்து பெறப்பட்ட தகவலை, மறுமுனையில் இருக்கும் தலைமைக்கு கொண்டு சேர்க்க மேற்கொள்ளும் , சாகசப் பயணமே இக்கதையின் மையம். தகவல் தொடர்பு வழிகள் அனைத்தும், துண்டிக்கப்பட்ட நிலையில், தங்கள் படையின் 1600 வீரர்களின் உயிரை காப்பாற்ற இருக்கும், ஒரே வழியான அந்த கடிதத்தை, இரு வீரர்களும் கொண்டு சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே இக்கதையின் இறுதிப் பகுதி.
திரைக்கதை, ஒளிப்பதிவு, வரைகலை நுட்ப்பம் :
நேரியல் முறையில் கூறப்பட்டிருக்கும் திரைக்கதை என்பதால், இரண்டு நாள் நடக்கும் கதைக்களத்திற்கு வலுசேர்த்துள்ளது. எதிர்பாராத திருப்புமுனைகளை கொண்டிருக்கும் திரைக்கதை, போர்க்களத்தின் எதார்த்தத்தை வெட்டவெளிச்சமாய் பிரகாசிக்கிறது.

ஹக்க்சவ் ரிட்ஜ், தி பியானிஸ்ட், டுன்கிர்க் (Hacksaw Ridge,The Pianist,Dunkirk) போன்ற சிறந்த போர்க் கதைகளங்களை கொண்ட திரைப்படங்களுக்கு, ஈடு கொடுக்கும் படியாய், அட்டகாசமான ஒளிப்பதிவும், அதற்கு கை கொடுத்திருக்கும் வரைகலை நுட்பமும், மெய்சிலிற்க வைக்கிறது . தனிச்சிறப்பாக, வெட்டப்படாமல் வெகுநேரம் தொடரும், காட்சியின் உருவாக்கத்தை எப்படி செய்திருப்பார்கள்? என சர்வதேச திரைத்துறை, தொழில்நுட்ப கலைஞர்கள் வியக்கும்படி, முழுப்படமும் நேர்த்தியான முறையில் கையாளப்பட்டுள்ளது.
ஒலிக்கலவை :
பிணங்களும், அதை மொய்த்துக் கொண்டிருக்கும் சிறு உயிரினங்களும் , சேற்றில் பதியும் காலணிகளும் , துப்பாக்கியில் தயாராகும் தோட்டாக்களும், மரங்களும் கூட போர்க்களத்தில் பேசிக்கொண்டிரும், சத்தத்தை தத்ருபமாக பதிவிறக்கி, கலந்து இத்திரை சித்திரத்தை, முழுமை படுத்திய பெரும்பங்கு, ஒலிக்கலவை கலைஞர்களையே சாரும்.
நடிகர்கள்:
மொத்த படத்திற்கும் சேர்த்து, ஆயிரக்கணக்கில் துணைநடிகர்கள் பங்காற்றியுள்ளார் . முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜார்ஜ் மெக்கெய், தீன் சார்லஸ் சாப்மேன் ஆகிய இருவரும், பிரிட்டனின் போர்வீரர்களாகவே மாறி விட்டார்கள். என்றால், அது மிகையாகாது. போர்க்களத்தில், உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் வீரர்களின் மனவேதனையை, ஒவ்வொரு துணைநடிகர்களின் முகத்திலும் நிலைநிறுத்தி, முதல் உலகப்போரை மீண்டும் நடத்தியுள்ளார் இப்படத்தின் இயக்குனர்.
தாக்கம் :
போரிலும், காதலிலும் எதுவும் தர்மமே என்ற வாய்மொழியைப் போல், வீரர்களின் உயிரை காணிக்கையாக்கியே கோட்டைகளும் , கோபுரமும் உருவாகிறது என்பதை, போர்வீரர்கள் வழியாய், ஒரு கதை சொல்லியாய், ஆழமான கண்ணீருடன் எடுத்துரைத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் சாம் மெண்டிஸ்.