பாராசைட் திரை விமர்சனம் Parasite movie review

Parasite movie review
சினிமா பிரியர்களின் சிறந்த சித்திரமாகவும், பல்மொழி பேசும் உலக மக்களால் கொண்டாடப்படும் சிறந்த நகைச்சுவை மற்றும் கிளர்ச்சியுடன் கூடிய படமாகவும், ஆஸ்கர் போன்ற பல விருதுகளை அள்ளி குவித்த கலை வடிவமாகவும், வடபழனி,கோடம்பாக்கம் உதவி இயக்குனர்களின் தேனீர், புகையிலையுடன் சேர்ந்து கொண்ட ஒரு பேசு பொருளாகவும் உருவெடுத்து உலக திரையரங்குகளை நிரப்பிக் கொண்டிருக்கும் திரைச்சித்திரம் தான் பாராசைட் (parasite).
கதை சுருக்கம்
பாராசைட்(parasite) என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் ஒட்டுண்ணி.
அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு திண்டாடும், எளிமையான குடும்பத்தின் உறுப்பினர்களான தாய், தந்தை, மகன், மகள் நால்வரும் சேர்ந்து, எல்லா வசதியும் படைத்த ஒரு குடும்பத்தின், பல்வேறு வேலை பொறுப்புகளை, இவர்கள் நால்வரும் அடைய நடத்தும் சதியும், அதன் பின்விளைவுகளும் இக்கதையின் கரு.
மேலும், இப்படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தும் விதமாய், படத்தின் மையப்பகுதி கொண்டிருக்கும் சுவாரசியமான திருப்புமுனை, காண்பவர்களை அடுத்த காட்சிக்காக, கண்ணிமைகளை மூடா வண்ணம் நிறுத்திப் பிடிக்கிறது. படத்தின் இறுதி காட்சிவரை, நம் கவனத்தை முழுமையாய் ஈர்க்கும் திரைக்கதை, மெய்சிலிர்க்கும் விதமாய் இருப்பதும், இச்சித்திரத்தின் சிறப்பம்சமாகும்.
கதாபாத்திர வடிவமைப்பு:
எல்லா கதாபாத்திரங்களும் மிகத்துல்லியமாக, எதார்த்தமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம், இத்திரைப்படத்தின் மற்றொரு சிறப்பாக அமைந்துள்ளது. இல்லாமையின் எதார்த்தத்தை, மிக எளிமையாக எடுத்துரைக்கும் வகையில், தந்தை கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பிற்கு ஏற்ப, பலம் பொருந்திய ஒன்றை, சார்ந்து வாழும் மற்றொரு வலிமையில்லா, உயிரினத்தின் தன்மையை வெளிப்படுத்தும் படியான கதாபாத்திரம், காண்பவர்களின் நெஞ்சில், நிலையாய் நிற்கும் வண்ணம் சித்தரிக்கப்பட்டு, அரங்கேற்றப்பட்டிருப்பது புதுமையே.
2003 இல் வெளிவந்த ஓல்ட்பாய் (oldboy) திரைப்படமும், கொரியன் திரையுலகின் முக்கிய திரைப்படமாகும். ஓல்ட்பாய் (oldboy) திரைப்படத்தின் சிறு சாயல் தெரியும்படி, பல வருடங்கள் வெளியுலகை பார்க்காமல் வாழ்ந்து வரும் ஒரு கதாபாத்திரம், பாரசைட்டிலும் (parasite) இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
திரைக்கதை வடிவமைப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு:
திரைக்கதை முழுமையாக, புதுமையும், எதார்த்தமும் நிறைந்ததாகவே உள்ளது. படத்தின் முதல் காட்சிக்கும், இறுதி காட்சிக்கும் இடையே, உள்ள தொடர்பை, பாமரமக்களும் புரிந்து கொள்ளும்படி, ஒளிப்பதிவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய வட்டத்திற்குள் நடக்கும், கதைக்களத்தை விளக்கிக் காட்ட, படத்தொகுப்பு பெரிதும் வலு சேர்த்துள்ளது.

தாக்கம்:
முதலாளித்துவ அடக்குமுறை, இல்லாமையின் கொடுமை இவையிரண்டையும், எண்ணற்ற திரைப்படங்களில் பார்த்திருந்தாலும், எவரும், எவரையும் அடிக்காமல், ஒடுக்காமல், உணர்வுகள், ஒரு சில வார்த்தைகள், எதார்த்த எண்ணங்கள், இவைகளை மட்டும் கொண்டு பெரிய தத்துவத்தை, மிக எளிமையாக சித்தரித்து, ஒரு புது புரட்சியை செய்துள்ளார் பாரசைட் படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் போங் ஜோன்-ஹோ.